Nov 11, 2018

60. கதம்ப வன வாஸிநீ

கதம்ப வன வாஸிநீ - கதம்ப மலர்கள் அடர்ந்த வனத்தின் நடுவில் உறைபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


ஸ்ரீலலிதாம்பிகையின் இருப்பிடமான சிந்தாமணி க்ரஹம் தெய்வீக நறுமணம் மிகுந்த இந்த கதம்ப வனத்தால் சூழப்பட்டது.

அம்பிகைக்கு மிகவும் பிடித்தது கதம்ப வனம். கதம்ப வன சுந்தரியாக இருப்பவள். லலிதாம்பிகையின் சிந்தாமணி க்ரஹத்தை சுற்றி 25 கோட்டைகள் உள்ளது.  ஸ்ரீ நகரத்தின் 25 கோட்டைகளுள் 7 வது வெள்ளி கோட்டைக்கும், 8 வது தங்கக் கோட்டைக்கும் இடையில் தான் கதம்ப மலர்கள் நிறைந்த வனம் உள்ளது.

ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வோர் அதிதேவதை உண்டு. அவ்வாறு இந்த கதம்ப வனத்தின் அதிதேவதையாக இருப்பவள் மந்த்ரிணி தேவி எனப்படும் ராஜஸ்யாமளை. இவள் 90 பீஜங்கள் உடைய மந்திரத்தின் ப்ரம்ம வித்தைக்கு அதிபதியாக விளங்குகிறாள்.

லலிதாம்பிகை தனது ராஜ்ய பாரம் அனைத்தையும் ஸ்யாமளா தேவியிடம் கொடுத்து அவள் உருவத்தில் இருந்து எல்லாக் காரியங்களையும் செய்து வருகிறாள். ஸ்யாமளா தேவியை ராஜமாதங்கி என்றும் அழைப்பதுண்டு.

இப்பூவுலகில், மதுரையைக் கடம்பாடவி என்றும் கதம்பவனம் என்று குறிப்பிடுகின்றனர். அங்கு ஸ்யாமளா தேவியானவள் மீனாட்சியாக உறைகிறாள்.

மேரு மலையின் உச்சியில் ஸ்ரீநகரமும், அதன் நடுவில் கதம்ப வனமும், அதன் நடுவில் பெரிய தாமரைக் காடும், அதன் நடுவில் சிந்தாமணி க்ரஹமும், க்ரஹத்தின் மத்தியில் ஸ்ரீசக்ர மேரு பீடமும், மேரு பீடத்தின் நடுவில் பிந்து பீடமும், பிந்து பீடத்தின் நடுவில் பஞ்ச பிரம்மாக்களையும் ஆசனமாக கொண்டு ஸ்ரீ லலிதா தேவி அமர்ந்து இருக்கிறாள். இவ்வாறு தேவியை த்யானம் செய்தல் வேண்டும்.

அம்பிகை கதம்ப வனத்தில் இருப்பதால் வாக்தேவிகள்  " கதம்ப வன வாஸிநீ " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam


Aug 26, 2018

59. மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா

மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா - பெரிய தாமரை காட்டில் உறைபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


ஸ்ரீநகரத்தின் நடுவில் 25வது கோட்டைக்கும், சிந்தாமணி க்ருஹத்திற்கும் இடையில் இருப்பதுதான் மஹா பத்ம வனம். இங்கு நிறைந்துள்ள தாமரை பூக்கள் நிலத் தாமரைகளாகும். அதுவும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை பூக்கள். தாமரை பூக்களின் ஒவ்வோர் இதழும் நூற்றுக்கணக்கான முழம் நீளமும் அகலமும் உடையது.

யோக சாஸ்திர அடிப்படையில், நமது உடலில், 6 ஆதாரங்களுக்கு மேல் உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரை உள்ளது. சகஸ்ராரம் எனும் சக்கரம்.  சகஸ்ரார சக்கரத்திற்கு நடுவில் ஒரு துளை வடிவில் இருக்கும் பகுதியை ப்ரம்மாந்திரம் அல்லது மஹாபத்மாடவி என்பர். ப்ரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தி இந்த துளையின் ஊடாக மட்டுமே மனித உடலில் இறங்கும். உலகத்தின் ஊடான தொடர்பு இந்த துளையின் வழியாகத்தான் ஏற்படுகிறது. இந்த துளை ஆறு ஆதாரங்களுடனும் இணைக்க படுகிறது.

குண்டலினி என்னும் ஆற்றலை யோக சாஸ்திர முறைப்படி சிறிது சிறிதாக உயர்நிலைக்கு ஏற்றி கொண்டு போனால் சகஸ்ரார பத்மத்தை அடையலாம்.   சிவனுடன் லலிதாம்பிகை சசஸ்ராரத்தில் தான் இணைகிறாள். சகஸ்ராரத்தின் நடுவில் உள்ள மஹாபத்மாடவியில், அதாவது பெரிய தாமரைக்காட்டில் தேவி லலிதாம்பிகை உறைகிறாள்.

இவ்வாறு தேவி லலிதாம்பிகை ஸ்ரீநகரத்தில் உள்ள அடர்ந்த தாமரைக் காட்டில் உறைகிறாள் என்பதை தான் "மஹா பத்மாடவீஸம்ஸ்த்தா " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

58. பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா

பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா - பஞ்ச ப்ரம்மங்களையும் ஆசனமாக கொண்டவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


அம்பிகை சிந்தாமணி கற்களால் கட்டப்பட்ட க்ரஹத்தின் உள்ளே தனது சிம்ஹாஸனத்தில் பஞ்ச
 ப்ரம்மாக்களையும்  ஆசனமாக கொண்டு இருக்கிறாள்.

ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவரும் சக்தியோடு சேர்ந்து இருக்கும் போது பஞ்ச ப்ரம்மாக்கள் எனவும், அவர்களே தனித்து இருக்கும் போது பஞ்ச ப்ரேதர்கள் எனவும் கூறுவர்.

ஸ்ருஷ்டிக்கு அதிபதியான ப்ரம்மா, ஸ்திதிக்கு அதிபதியான விஷ்ணு, சம்ஹார தொழிலுக்கு தலைவரான ருத்ரன், திரோபாவத்திற்கு அதாவது மறைத்தல் தொழிலுக்கு தலைவரான மஹேஸ்வரன் ஆகிய நான்கு தேவதைகளும் நான்கு கால்கள். இந்த நான்கு கால்கள் ஒரு பீடத்தை தாங்கி கொண்டிருக்கிறது. அந்த பீடம் தான் சதாசிவன். சதாசிவன் அனுக்கிரஹ தொழிலுக்கு அதிபதி. அதாவது லலிதாம்பிகை அனுக்கிரஹத்திற்கும் மேலே அமர்ந்திருக்கிறாள். இந்த பஞ்ச ப்ரம்மாக்களையும்  தன் ஆசனமாக லலிதாம்பிகை கொண்டிருக்கிறாள்.

யோக சாஸ்திரத்தின் அடிப்படையில், நமது சரீரத்தில் மூலாதாரம் என்னும் சக்கரத்தின் அதிபதியான விநாயகர் லலிதாம்பிகையின் பாதுகைகளை தாங்குபவராகவும், ஸ்வாதிஷ்டானம் - மணிபூரகம் - அநாகதம் - விசுக்தி என்னும் நான்கு சக்கரங்களிலும் உள்ள ப்ரம்மா - விஷ்ணு - ருத்ரன் - மஹேஸ்வரன் ஆகிய ஈஸ்வரர்கள் நான்கு தேவி லலிதாம்பிகை சிம்ஹாஸனத்தின் நான்கு கால்கள் என்றும், ஆக்ஞா சக்கரத்தில் உள்ள சதாசிவன் மேற்பலகை என்றும், சிரசில் உள்ள சகஸ்ரார கமலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு அம்பிகை பஞ்ச பிரம்மாக்களை தன் ஆசனமாக கொண்டிருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் "பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

May 14, 2018

57. சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா

சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா - சிந்தாமணி கற்களால் கட்டப்பட்ட  க்ரஹத்தின் உள்ளே வீற்றிருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா




இருபந்தைந்து கோட்டைகளையும், நூறு கோபுரங்களையும் கொண்ட ஸ்ரீநகரத்தின் நடுவே மிகவும் விலை உயர்ந்த சிந்தாமணி ரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையின் உள்ளே தேவி லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள்.
இது ஸ்ரீநகரத்தின் வடக்கு திசையில் உள்ளது.

சிந்தாமணி என்பது ஒருவகை ரத்தின கல். அதனிடம் நாம் ஏதேனும் வேண்டும் என்று கேட்டால் அது உடனே கொடுத்து விடும். சிந்தாமணியின் குணமே அதுதான்.

சின்னஞ்சிறு கல்லாக இருக்கும் சிந்தாமணியே நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கும் என்றால்,  அம்பிகை இருப்பதோ சிந்தாமணி கிரஹத்தில் ! அப்படியானால் அவள் அனைத்தையும் தர வல்லவள் என்றே அர்த்தம். குழந்தைகள் எதையெல்லாம் கேட்கிறார்களோ, அதையெல்லாம் தருவதற்காக அம்பிகை சிந்தாமணி கிரஹத்தில் வீற்றிருக்கிறாள்.

யோக சாஸ்திரத்தின் அடிப்படையிலே பார்த்தால், ஸ்ரீபுரம் நமது மனோ நிலையாகவும் நம்முடைய எண்ணங்களை எல்லாம் மணியாக்கி (மணி மணியான சிந்தனைகளாக) அவளைப் பற்றியே நினைத்து அந்த மணிகளாலேயே ஆலயம் கட்டினால் அதுவும் சிந்தாமணி க்ருஹந்தான். அதற்குள், அதாதவது நம் சிந்தைக்குள், அவளே வந்து குடிகொண்டு விடுவாள். அப்படிப் பண்ணுவதற்கு வழியாகத்தான் வெளியிலே அவளுக்கு வாஸஸ்தானம் கூறி அதை த்யானிப்பது. முடிவில் அவள் நமக்குள்ளேயே வரவேண்டும். அப்படி வந்தால், நம் உடலையே தேவி தன் இருப்பிடமாக கொண்டு, சிந்தாமணியின் திருப்தியை அங்கேயே ஏற்படுத்துகிறாள்.

மேலும், இந்த சிந்தாமணி மாளிகையில் தான் எல்லா மந்திரங்களும்  உற்பத்தியாகின்றது.

இவ்வாறு தேவி லலிதாம்பிகை சிந்தாமணி கிரஹத்தில் கேட்டதையெல்லாம் வழங்குபவளாக வீற்றிருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை " சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா" என்று போற்றுகின்றனர். 

இந்த சிந்தாமணி க்ரஹத்தை  தியானிப்பதால் மனதில் உள்ள உபாதைகள் நீங்கும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Apr 15, 2018

56. ஸ்ரீமந் நகர நாயிகா


ஸ்ரீமந் நகர நாயிகா - மேன்மை பொருந்திய ஸ்ரீநகரத்தின் தலைவியாக இருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



தேவி லலிதாம்பிகை புனிதமான எல்லா செல்வ வளங்களும் நிறைந்த ஸ்ரீநகரத்தின் அதிபதியாக இருக்கிறாள். இந்திர நகரமான அமராவதி, ப்ரம்மலோகம், வைகுண்டம், கைலாயம் இவைகளை காட்டிலும் மேன்மை உடையது ஸ்ரீநகரம்.

சிவனுக்குக் கைலாஸம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் போல், லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு வாஸஸ் ஸ்தானம்தான். ஆனால் அம்பிகைக்கோ இரண்டு. அதில் ஒன்று பிரம்மாண்டம் என்கிறதற்குள்ளேயே எல்லா க்ரஹங்களும் தன்னைச் சுற்றி வரும்படி மத்தியிலில் இருக்கும் மேரு சிகரத்தில் இருப்பது. அதாவது, மேரு மலையின் நடுவில் உள்ள சிகரத்தில் அம்பிகையின் இருப்பிடமான ஸ்ரீநகரம் உள்ளது.
அந்த மேருவிலேயே வேறே மூன்று சிகரங்களில் ப்ரம்ம லோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் ஆகியவை இருப்பதாகவும் அந்த மூன்றுக்கும் நடுநாயகமான பிரதான சிகரத்திலே அம்பாள் லோகம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறது.

இது தவிர இந்த ப்ரஹ்மாண்டத்திலேயே அடங்காமல் தனி லோகமாக ஸ்ருஷ்டி செய்துக்கொண்டு அதற்குள்ளே ஒரு த்வீபத்திலும் (தீவிலும்) வசிக்கிறாள். அதாவது அம்ருதக்கடலின் நடுவில் தேவி தனக்கென்று அமைத்துக் கொண்ட இடம் ஸ்ரீநகரம்.

மேரு மத்தியானாலும் சரி, அம்ருதகடலானாலும் சரி, அவளுடைய ஊருக்கு போய்விட்டால் அங்கே ஒன்றும் வித்யாசம் இல்லை. வெளிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்து அரண்மனையில் அவள் கொலுவிருக்கும் இடம் வரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான பிராகாரங்கள், வனங்கள், தடாகங்கள், பரிவாரங்கள்தான். அந்த தலைநகரத்திற்கு ஸ்ரீநகரம் என்று பெயர்.

ஸ்ரீநகரத்தை ஸ்ரீபுரம் என்றும் சொல்வதுண்டு. அது இருபத்தைந்து கோட்டைகளும் பிராகாரங்களும் சூழ்ந்தது. முதலில் இரும்பில் இருந்து ஸ்வர்ணம் வரை ஒவ்வொரு லோகத்தால் ஒவ்வொரு கோட்டை. அப்புறம் நவரத்தினங்கள் ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு கோட்டை. இப்படியே ஸூக்ஷ்மமாகப் போய் மனசாலேயே ஆன கோட்டை, புத்தியாலேயே ஆன கோட்டை, அஹங்காரத்தில் ஆன கோட்டை எல்லாம் உண்டு. கடைசியில் ஸூர்ய தேஜஸ், சந்திர தேஜஸ், மன்மத தேஜஸ் இவற்றைக் கொண்டே ஒவ்வொரு கோட்டை. கோட்டைகளுக்கு நடுவே திவ்ய வ்ருக்ஷங்கள் உள்ள பல வனங்கள், பல ஓடைகள். எல்லாம் தாண்டிப் போனால் இருபத்தைந்தாவது  ப்ராகாரம் மஹா பத்மவனம் என்று ஒரே தாமரை மயமாய்ப் பூத்த ஓடை வரும். அது அகழி மாதிரி. அதற்குள்ளே செங்கலுக்குப் பதில் சிந்தாமணிக் கற்களையே வைத்துக் கட்டியதான அம்பாளின் அரண்மனை வரும்.

இவ்வாறு, தேவி லலிதாம்பிகை பக்தர்களுக்கு ராஜராஜேஸ்வரியாக காட்சி கொடுத்து அருள் செய்யும் தலைநகரமாக விளங்குவது ஸ்ரீநகரம். இவ்வாறு தேவி ஸ்ரீநகரத்தின் தலைவியாக இருக்கிறாள் என்பதை வாக்தேவிகள் "ஸ்ரீமந் நகர நாயிகா" என்று லலிதாம்பிகையை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Apr 12, 2018

55. ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா


ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா - மேரு மலையின் நடு சிகரத்தில் வீற்றிருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


லலிதாம்பிகை அழகிய மேரு மலையின் நடுவில் வசிப்பவள். மேரு மலையின் உச்சியில் ஆயிரம் சிகரங்கள் உள்ளன. அவற்றின் நடுவில் நான்கு சிகரங்கள் மிக பெரியது. அதில் ஒரு சிகரம் மத்தியிலும், அவற்றை சுற்றி மூன்று சிகரங்கள் முக்கோணம் போல் இருக்கும். அதில் கிழக்கில் உள்ள சிகரத்தில் ப்ரம்மாவின் சத்யலோகமும், தென்மேற்கில் உள்ள சிகரத்தில் விஷ்ணுவின் வைகுண்டமும், வடமேற்கில் உள்ள சிகரத்தில் சிவனின் கைலாயமும் உள்ளது. அந்த மூன்று சிகரங்களின் நடுவில் உள்ள பெரிய சிகரத்தில் தான் லலிதாம்பிகையின் பட்டணமான ஸ்ரீநகரம் உள்ளது.
இம்மேருமலை சூக்ஷ்ம, ஸ்தூல, தேவ லோகங்களுக்கும், இப்பரபஞ்சத்துக்கும் மையப்பகுதியாக கருதப்படுகிறது. கடவுள்களும் தேவர்களும், ஆற்றலின் மூலஸ்தானமாகவும் சக்தியின் ஆதாரமாகவும் விளங்கும் இம்மலையையே வசிப்பிடமாக கொண்டுள்ளனர்.
பிரகாசத்துடன் தங்கமாய் மின்னும் தன்மையுடையதாகவும் பல உயர்ந்த பண்புகளையும் கொண்டதாய் இம்மலை போற்றப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த இம்மலை பார்வைக்கும் அறிவுக்கும் புலப்படுவதாகவும் எட்டக்கூடியதாகவும் மற்ற யுகங்களான துவாபர, த்ரேதா மற்றும் ஸத்ய யுகத்தில் இருந்துள்ளது. கலியுகத்தில் இம்மலை அறிவுக்கும் புலன்களுக்கும் புலப்படுவது  அரிது.
ஸ்ரீசக்கரத்தின் நடுவில் முக்கோணமும், அதன் நடுவில் பிந்துவும் காணப்படும். அந்த பிந்துவில் லலிதாம்பிகை காமேஸ்வரரோடு அமர்ந்து இருக்கின்றனர்.
யோக சாத்திரத்தின் அடிப்படையில், நம் உடம்பில் உள்ள முதுகுத் தண்டில் இருக்கும் சுழுமுனை நாடிக்கு ஸுமேரு என்று பெயர். இதன் நடு சிகரமே ஸகஸ்ரார கமலம். இதன் நடுவில் உள்ள ப்ரம்மரந்திரம் என்னும் ஸ்ரீ நகரத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாள்.
இவ்வாறு தேவி லலிதாம்பிகை மேரு மலையின் நடுவில் வசிக்கிறாள் என்பதை தான் " ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா" என்று வாக்தேவிகள் போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Feb 21, 2018

54. ஸ்வாதீந வல்லபா


ஸ்வாதீந வல்லபா- தன்வயப்பட்ட அன்பு மிக்க கணவரை உடையவள். 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா




லலிதாம்பிகையின் கணவராகிய காமேஸ்வரன் அவளுக்கு மாத்திரமே உரியவர். அம்பிகை சுதந்திரமானவள். அவள் பிறருக்கு கட்டுப்படாமல் அன்புக்கு உகந்தவளாக இருக்கும் தன்மை உடையவள். அப்பேற்பட்டவள், அந்த சிவகாமேஸ்வரரை தன்னுடைய வசத்தில் வைத்திருப்பவள்.

பரப்ரம்மமாகிய லலிதாம்பிகை தான் விரும்பும் போது தன்னிடமே காமேஸ்வரரைத் தோற்றுவித்து, அவரை தன் கணவராகக் கொண்டு அவரது மடியின் மீது அமர்ந்திருப்பவளாக காட்சியளிக்கின்றார்.

அம்பிகை சொன்னால் சிவகாமேஸ்வரர் எதை வேண்டுமானாலும் செய்வார். அம்பிகையின் மீது உள்ள அன்பால் ஈஸ்வரன் தனது தொடை மேல் அம்பிகையை வைத்து கொண்டாடுபவர்.

உலகத்திலுள்ள பதி-பத்னிகள் மாதிரி இல்லாமல் ஈஸ்வரனும் அம்பாளும் அநேக விதங்களில் வித்யாசமாக இருப்பவர்கள். உலகில் உள்ள ஸ்த்ரீகளை ‘அபலா’ என்கிறது வழக்கம். பலம் குறைந்தவர்கள் என்று அர்த்தம். கணவன் தான் தன் பலத்தினால் அவளுக்கு ரக்ஷையாக இருப்பவன். பலம் என்றாலும் சக்தி என்றாலும் ஒன்றுதான். சிவ-சக்தியை எடுத்துக் கொண்டாலோ ‘சக்தி’ என்பதே அவள் பெயராகத்தானிருக்கிறது! அவளில்லாவிட்டால் அவன் ஒன்றும் செய்வதற்கில்லாமல் கிடக்கவேண்டி இருக்கிறது. 

மேலும், சக்தியின் துணையின்றி சிவன் எதையும் செய்ய முடியாது. இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "சகல உலகங்களையும் படைக்கும் ஈசன்,  சக்தியாகிய உன்னுடன் இணைந்தால் தான் இந்த உலகத்தை படைக்க முடியும். சக்தி இல்லாமல் சிவனால் அசைவதற்கு கூட ஸாமர்த்தியம் உள்ளவராக இல்லை" என்று கூறுகிறார். 

இவளால் அவன், அவனால் இவள் என்று ஒருத்தருக்கொருத்தர் பெருமை சேர்த்துத் தருபவர்களாக ஆதி தம்பதியான காமேஸ்வரன் - காமேஸ்வரி இருக்கிறார்கள். வாஸ்தவத்தில் ஏற்றத் தாழ்வேயில்லாமல், அவர்கள் ஒருத்தருக்கு மற்றவர் ஸமம் என்று இருப்பவர்கள். ‘அன்யோன்ய ஸத்ருசம்’ என்று சொல்வது. ஈச்வரனும் அம்பாளும் ஸமமான மஹிமை உடையவர்கள். 

இவ்வாறு அன்பு மிக்க கணவரை உடையதால் வாக்தேவிகள் அம்பிகையை "ஸ்வாதீந வல்லபா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam